search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சபரிமலை கோவில்"

    • ஐப்பசி மாத பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நடை நேற்று மாலை திறக்கப்பட்டது.
    • கணபதி ஹோமம், உஷ பூஜை, புஷ்பாபிஷேகம், நெய் அபிஷேகம் உள்ளிட்ட வழக்கமான பூஜைகள் அனைத்தும் நடைபெற்றது.

    திருவனந்தபுரம்:

    சபரிமலை ஐயப்பன் கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் மண்டல மற்றும் மகரவிளக்கு பூஜை காலங்களில் பல லட்சம் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய வருவார்கள். மேலும் மாதந்தோறும் நடத்தப்படும் மாதாந்திர பூஜையிலும் ஆயிரக்கணக்கானோர் சபரிமலைக்கு வந்து சாமி தரிசனம் செய்வார்கள்.

    இந்நிலையில் ஐப்பசி மாத பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நடை நேற்று (17-ந்தேதி) மாலை திறக்கப்பட்டது. தந்திரி கண்டரரு மகேஷ் மோகனரு முன்னிலையில் மேல்சாந்தி ஜெயராமன் நம்பூதிரி நடையை திறந்து வைத்தார். வருகிற 22-ந்தேதி வரை கோவில் நடை திறந்திருக்கும்.

    பக்தர்கள் இன்று முதல் சாமி தரிசனத்துக்கு அனுமதிக்கப்பட்டனர். கணபதி ஹோமம், உஷ பூஜை, புஷ்பாபிஷேகம், நெய் அபிஷேகம் உள்ளிட்ட வழக்கமான பூஜைகள் அனைத்தும் நடைபெற்றது. சாமி தரிசனம் செய்ய ஆன்லைன் முன்பதிவு செய்த பக்தர்களே அனுமதிக்கப்பட்டார்கள்.

    பக்தர்கள் உடனடியாக முன்பதிவு செய்து கொள்ளும் வகையில் நிலக்கல் மற்றும் பம்பையில் முன்பதிவு மையங்கள் செயல்படுகின்றன. அங்கும் ஏராளமான பக்தர்கள் முன்பதிவு செய்து சாமி தரிசனம் செய்ய சென்றனர்.

    சபரிமலை ஐயப்பன் மற்றும் மாளிகைபுரம் கோவில்களுக்கான மேல் சாந்திகள் ஆண்டுக்கு ஒரு முறை புதிதாக தேர்வு செய்யப்படுவார்கள். அடுத்த ஒரு வருடத்துக்கான புதிய மேல்சாந்திகள் தேர்வு இன்று (18-ந்தேதி) நடைபெற்றது.

    சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு 17 பேரும், மாளிகைபுரம் கோவிலுக்கு 12 பேரும் நேர்முகத்தேர்வு மூலம் தேர்வு செய்யப்பட்டு உள்ளனர். அவர்களில் ஐயப்பன் கோவில் மற்றும் மாளிகைபுரம் கோவிலுக்கு தலா ஒருவர் குலுக்கல் முறையில் மேல்சாந்தியாக தேர்வு செய்யப்பட்டனர்.

    சபரிமலையின் புதிய மேல்சாந்தியாக மூவாற்றுப்புழா ஏனநல்லூரை சேர்ந்த பி.என். மகேஷ் தேர்வு செய்யப்பட்டார். மாளிகைபுரம் மேல்சாந்தியாக பி.ஜி.முரளி தேர்வு செய்யப்பட்டார். பந்தளம் அரண்மனை குழந்தைகள் வைதே மற்றும் நிருபமா வர்மா ஆகியோர் மேல் சாந்திகள் தேர்வு சீட்டுகளை எடுத்து கொடுத்தனர்.

    புதிதாக தேர்வு செய்யப்பட்ட மேல்சாந்திகள் இருவரும் கார்த்திகை மாதம் 1-ந்தேதி பொறுப்பேற்றுக் கொள்வார்கள்.

    • கோவில் நடை திறக்கப்பட்டு நிர்மால்ய தரிசனம், கணபதி ஹோமம், நெய் அபிஷேகம், உஷ பூஜை, உச்ச பூஜை உள்பட பல்வேறு பூஜைகள் நடைபெறும்.
    • மகரவிளக்கு சீசனை முன்னிட்டு சபரிமலை ஐயப்பன் கோவிலில் வருகிற நவம்பர் மாதம் 16-ந்தேதி நடை திறக்கப்படும்.

    திருவனந்தபுரம்:

    சபரிமலை ஐயப்பன் கோவிலில் தமிழ் மாதத்தின் முதல் 5 நாட்களிலும் நடை திறக்கப்பட்டு, பல்வேறு பூஜைகள் நடைபெறும்.

    அதன்படி ஐப்பசி மாத பூஜைக்காக சபரிமலை கோவிலில் 17-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) மாலை 5.30 மணிக்கு நடை திறக்கப்படுகிறது. தந்திரி கண்டரரு மகேஷ் மோகனரு முன்னிலையில், மேல்சாந்தி ஜெயராமன் நம்பூதிரி நடையை திறந்து வைத்து, குத்து விளக்கு ஏற்றி தீபாராதனை காட்டுகிறார். 18-ந் தேதி அதிகாலை 5 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு நிர்மால்ய தரிசனம், கணபதி ஹோமம், நெய் அபிஷேகம், உஷ பூஜை, உச்ச பூஜை, தீபாராதனை, புஷ்பாபிஷேகம், அத்தாழ பூஜை உள்பட பல்வேறு பூஜைகள் நடைபெறும்.

    18-ந் தேதி காலை 8 மணியளவில் தந்திரி கண்டரரு மகேஷ் மோகனரு, மேல்சாந்தி ஜெயராமன் நம்பூதிரி முன்னிலையில், 2023-24-ம் ஆண்டுக்கான சபரிமலை மற்றும் மாளிகப்புரம் கோவில்களுக்கான புதிய மேல்சாந்திகள் குலுக்கல் மூலம் தேர்ந் தெடுக்கப்படுவார்கள். சபரிமலை ஐயப்பன் கோவில், மாளிகப்புரம் கோவில் ஆகியவற்றிற்கு ஏற்கனவே நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட்டவர்கள், குலுக்கல் மூலம் தேர்ந்து எடுக்கப்படுகிறார்கள்.

    இவர்கள் இந்த ஆண்டின் மண்டல சீசன் முதல் அடுத்த ஆண்டு நவம்பர் மாதம் வரை ஓராண்டு காலத்திற்கு மேல்சாந்திகளாக பணியாற்றுவார்கள்.

    ஐப்பசி மாத பூஜையை முன்னிட்டு 18-ந் தேதி அதிகாலை முதல் 5 நாட்கள் நடைபெறும் சிறப்பு பூஜைகளுடன் 22-ந் தேதி அத்தாழ பூஜைக்கு பிறகு அரிவராசனம் பாடல் இசைக்கப்பட்டு, இரவு 10 மணிக்கு கோவில் நடை அடைக்கப்படும்.

    ஐப்பசி மாத பூஜையையொட்டி சபரிமலைக்கு வரும் ஐயப்ப பக்தர்களின் வசதிக்காக கேரளாவின் பல்வேறு பகுதிகளில் இருந்து கேரள அரசின் சிறப்பு பஸ்கள் சபரிமலைக்கு இயக்கப்படும். அதே போல், ஆன்லைன் முன்பதிவு அடிப்படையிலேயே பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள். இதற்கான முன்பதிவு நடைபெற்று வருகிறது. நிலக்கல் பகுதியில் தற்காலிக முன்பதிவு மையம் 17-ந் தேதி முதல் செயல்படும்.

    நடப்பு ஆண்டின் மண்டல, மகரவிளக்கு சீசனை முன்னிட்டு சபரிமலை ஐயப்பன் கோவிலில் வருகிற நவம்பர் மாதம் 16-ந்தேதி நடை திறக்கப்படும். 2023-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 27-ந்தேதி மண்டல பூஜையும், 2024-ம் ஆண்டு ஜனவரி 15-ந் தேதி மகர விளக்கு பூஜையும் நடைபெறும் என்று திருவிதாங்கூர் தேவஸ்தானம் அறிவித்து உள்ளது.

    • பாலக்காடு மற்றும் கொல்லம் மாவட்டங்களில் இருந்து நெற்கதிர் கட்டுகள் சன்னிதானத்திற்கு எடுத்து வரப்பட உள்ளன.
    • ஓணம் பண்டிகையையொட்டி 27-ந் தேதி முதல் 31-ந் தேதி வரை கோவில் நடை திறந்திருக்கும்.

    சபரிமலை:

    சபரிமலை ஐயப்பன் கோவிலில் ஆண்டு தோறும் நிறை புத்தரிசி பூஜை நடைபெறும். அதன்படி திருவனந்தபுரம் கவடியார் அரண்மனையில் இருந்து பிறப்பிக்கப்பட்ட உத்தரவின்பேரில் நாளைமறுநாள் (வியாழக்கிழமை) நிறை புத்தரிசி பூஜை நடக்கிறது.

    இதையொட்டி நாளை (புதன்கிழமை) மாலை 5 மணிக்கு கோவில் நடை திறக்கப்படுகிறது. நாளை மறுநாள் (வியாழக்கிழமை) அதிகாலை 5.40 மணி முதல் 6.15 மணி வரை தந்திரி கண்டரு ராஜீவரரு தலைமையில் நிறை புத்தரிசி பூஜை நடைபெறுகிறது. இதற்காக பாலக்காடு மற்றும் கொல்லம் மாவட்டங்களில் இருந்து நெற்கதிர் கட்டுகள் சன்னிதானத்திற்கு எடுத்து வரப்பட உள்ளன. அவ்வாறு எடுத்துவரப்படும் நெற்கதிர் கட்டுகளுக்கு பூஜை செய்த பிறகு பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்படும்.

    அந்த நெற்கதிர்களை வீடுகளில் வைத்து பாதுகாத்து வந்தால், சகல ஐஸ்வர்யங்களும் கிடைப்பதுடன், நோய் நொடிகள் அற்றுப்போகும் என்பது நம்பிக்கை. விவசாய அபிவிருத்திக்கும், அவர்களின் எதிர்கால சுபிட்சமான வாழ்க்கைக்கும் வேண்டி இந்த பூஜை நடைபெறுகிறது.

    நிறை புத்தரிசி பூஜை வழிபாடுகளுக்கு பின் அன்றையதினம் இரவு 10 மணிக்கு கோவில் நடை அடைக்கப்படும்.

    ஆவணி மாத பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நடை 16-ந் தேதி மாலையில் மீண்டும் திறக்கப்படும். 17-ந் தேதி முதல் 21-ந் தேதி வரை 5 நாட்கள் பூஜைகள் நடைபெறும்.

    அதன்பிறகு ஓணம் பண்டிகையையொட்டி 27-ந் தேதி முதல் 31-ந் தேதி வரை கோவில் நடை திறந்திருக்கும்.

    • கடந்த 16-ந்தேதி தேவஸ்தான ஊழியர் ஒருவர் சபரிமலைக்கு வந்து சாமி தரிசனம் செய்தார்.
    • ரெஜிகுமாரின் அறையை போலீசார் சோதனை செய்தனர்.

    திருவனந்தபுரம்:

    ஆனி மாத பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நடை கடந்த 15-ந்தேதி திறக்கப்பட்டது. இன்று வரை 5 நாட்கள் சிறப்பு பூஜைகள், வழிபாடுகள் நடக்கிறது. நடை திறக்கப்பட்டதையொட்டி ஏராளமான பக்தர்கள் இருமுடி கட்டி வந்து சாமி தரிசனம் செய்து வருகிறார்கள்.

    இந்த நிலையில், கடந்த 16-ந்தேதி தேவஸ்தான ஊழியர் ஒருவர் சபரிமலைக்கு வந்து சாமி தரிசனம் செய்தார். அப்போது அவர் சன்னதியில் இருந்த காணிக்கை பெட்டியில் 10.95 கிராம் எடையிலான வளையலை காணிக்கையாக செலுத்தினார். ஆனால், இந்த வளையல் காணிக்கை வரவு கணக்கில் காட்டப்படவில்லை.

    காணிக்கை பெட்டியில் போடப்பட்ட தங்க வளையல் மாயமாகி இருப்பது தேவஸ்தான அதிகாரிகளுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதையடுத்து இதுபற்றி சபரிமலை செயல் அதிகாரி லஞ்சஒழிப்பு போலீசில் புகார் அளித்தார்.

    அதைத்தொடர்ந்து போலீசார் கடந்த 18-ந்தேதி சன்னிதானத்தில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தனர்.

    அப்போது, சன்னிதானத்தில் திருநடை காணிக்கை பெட்டியில் போடப்படும் காணிக்கைகள் பெல்ட் மூலமாக காணிக்கை சேகரிக்கப்படும் அறைக்கு செல்வதும், அங்கு வந்த வளையலை பணியில் இருந்த தேவஸ்தான ஊழியரான ரெஜிகுமார் (வயது 45) என்பவர் திருடியதும் கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருந்தது. அந்த காட்சிகள் மூலம் போலீசார் ரெஜிகுமார் திருடியதை உறுதிபடுத்தினர்.

    பின்னர், ரெஜிகுமாரின் அறையை போலீசார் சோதனை செய்தனர். அப்போது அவரது தலையணைக்கு அடியில் மாயமான வளையல் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதைதொடர்ந்து தேவஸ்தான லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் ரெஜிகுமாரை கைது செய்து அவரை பம்பை போலீசாரிடம் ஒப்படைத்தனர். பம்பை போலீசார் அவரை ரான்னி கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

    • சபரிமலைக்கு மண்டல பூஜை மற்றும் மகர விளக்கு திருவிழாக்களில் பங்கேற்க நாடு முழுவதிலும் இருந்து பக்தர்கள் வருவார்கள்.
    • பத்தினம்திட்டா மாவட்டத்தின் வளர்ச்சிக்கு உத்வேகம் அளிக்கும் முறையில் மாநில அரசின் 100 நாள் திட்டத்தின் கீழ் இங்கு புதிய சாலை அமைக்கப்பட்டுள்ளது.

    திருவனந்தபுரம்:

    கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவில் உள்ளது. மலைமேல் அமைந்துள்ள இக்கோவிலில் நடைபெறும் மண்டல பூஜை மற்றும் மகர விளக்கு திருவிழாக்களில் பங்கேற்க நாடு முழுவதிலும் இருந்து பக்தர்கள் வருவார்கள்.

    சபரிமலை ஐயப்பன் கோவில் வரும் பக்தர்கள் வசதிக்காக இக்கோவில் அமைந்துள்ள பத்தினம்திட்டா மாவட்டத்தில் விமான நிலையம் அமைக்க வேண்டும் என கேரள அரசு மத்திய அரசுக்கு வேண்டுகோள் விடுத்தது. இதற்காக நிலம் தேர்வு செய்யும் பணி நடந்து, அதனை பற்றிய விபரங்கள் மத்திய சிவில் விமான போக்குவரத்து துறைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

    இதையடுத்து மத்திய விமான போக்குவரத்து துறை அதிகாரிகள், சுற்றுச்சூழல் துறையினர் முதல் கட்ட ஆய்வு பணிகள் மேற்கொண்டனர். தற்போது சபரிமலையில் விமான நிலையம் அமைக்க மத்திய அரசின் அனுமதி கிடைத்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதுபற்றி கேரள முதல்-மந்திரி பினராயி விஜயன் கூறியதாவது:-

    சபரிமலையில் புதிய விமான நிலையம் அமைக்க தேவையான அனுமதி கிடைத்துள்ளது. எனவே அங்கு கட்டுமான பணிகள் தொடங்கப்பட உள்ளன. விரைவில் இப்பணிகள் தொடங்கும்.

    பத்தினம்திட்டா மாவட்டத்தின் வளர்ச்சிக்கு உத்வேகம் அளிக்கும் முறையில் மாநில அரசின் 100 நாள் திட்டத்தின் கீழ் இங்கு புதிய சாலை அமைக்கப்பட்டுள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • ஐயப்பனை தரிசிக்க செல்லும் பக்தர்கள் கோவிலில் சிறப்பு வழிபாடுகள் நடத்த கட்டணம் செலுத்த வேண்டும்.
    • சென்னை பக்தர் கொடுத்த புகார் தொடர்பாக பம்பை போலீசார் விசாரணை நடத்தினர்.

    திருவனந்தபுரம்:

    சபரிமலை ஐயப்பன் கோவிலில் நடைபெறும் மண்டல பூஜை மற்றும் மகர விளக்கு விழாக்களுக்கு நாடு முழுவதிலும் இருந்து பக்தர்கள் செல்வார்கள்.

    ஐயப்பனை தரிசிக்க செல்லும் பக்தர்கள் கோவிலில் சிறப்பு வழிபாடுகள் நடத்த கட்டணம் செலுத்த வேண்டும். குறிப்பாக சாமிக்கு தங்க அங்கி சார்த்தி வழிப்பட கோவிலில் கட்டணம் செலுத்தி ரசீது பெற்றுக்கொள்ள வேண்டும்.

    இதுபோல களபாபிஷேகம், நெய்யபிஷேகம் போன்றவற்றிற்கும் கட்டணம் வசூலிக்கப்படுகிறது.

    சீசன் காலங்களில் கோவிலில் வழிபாடு நடத்த பக்தர்கள் ஏராளமானோர் காத்திருப்பார்கள். இதில் முறைகேடு நடப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. குறிப்பாக களபாபிஷேகம், சாமிக்கு தங்க அங்கி சார்த்தி வழிபடுவதற்கான கட்டணம் போன்றவற்றிற்கு போலி ரசீது வழங்கப்படுவதாக கூறப்பட்டது.

    இதில் சென்னையை சேர்ந்த பக்தர் ஒருவரிடம் ரூ.1.6 லட்சத்திற்கு போலி ரசீது கொடுத்து ஏமாற்றியது தெரியவந்தது. அந்த பக்தர் இதுதொடர்பாக பம்பை போலீசில் புகார் கொடுத்தார்.

    சென்னை பக்தர் கொடுத்த புகார் தொடர்பாக பம்பை போலீசார் விசாரணை நடத்தினர். இதில் பம்பையில் உள்ள விருந்தினர் மாளிகையில் கடந்த சீசன் காலத்தில் தங்கி இருந்த 2 பேர் மீது இந்திய தண்டனை சட்டம் 420, 463, 468,469 மற்றும் 471 ஆகிய 5 பரிவுகளில் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவம் கேரளாவில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • சபரிமலையில் நேற்று மாலை அரவணை விற்பனை நிறுத்தப்பட்டது.
    • ஏலக்காய் இல்லாத அரவணை தயாரிக்க உத்தரவிடப்பட்டு, தயாரிப்பு பணியும் தொடங்கி விட்டது.

    திருவனந்தபுரம், ஜன. 12-

    சபரிமலை அய்யப்பன் கோவிலில் முக்கிய பிரசாதமாக அரவணை மற்றும் அப்பம் வழங்கப்பட்டு வருகிறது. பக்தர்கள் இதனை வாங்கி வீட்டுக்கு வாங்கிச் செல்வதை வழக்கமாக கொண்டு உள்ளனர்.

    இதனால் அரவணை பிரசாதம் டின்களில் அடைக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. தினமும் ஏராளமானோர் பிரசாதம் வாங்குவதை கருத்தில் கொண்டு, தட்டுப்பாடு இல்லாமல் இருக்க லட்சக்கணக்கான அரவணை டின்கள் இருப்பு வைக்கப்பட்டு விற்பனை நடைபெற்று வருகிறது. இதன் மூலம் திருவிதாங்கூர் தேவசம்போர்டுக்கு அதிக வருவாயும் வருகிறது.

    இந்த நிலையில் அர வணையில் சேர்க்கப்ப டும் ஏலக்காய் தரம் குறைந்திருப்பதாகவும் அதில் பூச்சிக்கொல்லி மருந்து அளவு அதிகமாக இருப்பதாகவும் புகார் கூறப்பட்டது. இது தொடர்பாக தனியார் நிறுவனம் சார்பில் கேரள ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

    இதனைத் தொடர்ந்து அரவணை பிரசாதத்தை ஆய்வுக்கு உட்படுத்த கேரள ஐகோர்ட்டு உத்தரவிட்டது.திருவனந்தபுரத்தில் உள்ள ஆய்வுகூடத்தில் நடத்த ப்பட்ட ஆய்வில், அரவணை தயாரிப்பில் தரமற்ற ஏலக்காய் பயன் படுத்தி இருப்பதும், அதில், பூச்சிக் கொல்லி மருந்தின் அளவு அதிகமாக இருப்பதும் தெரியவந்தது. இது தொடர்பான அறிக்கை ஐகோர்ட்டில் சமர்பிக்கப்பட்டது.

    இதற்கிடையில் 350 கிலோ அரவணையில் 750 கிராம் ஏலக்காய் மட்டுமே பயன்படுத்தப்படுகிறது. இது மொத்தப் பொருட் களில் வெறும் 0.20 சதவீதம் தான் என தெரிவிக்கப்ப ட்டது. மேலும் அர வணை 200 டிகிரிக்கு மேல் வெப்பநிலையில் தயாரிக்கப்படுவதால் அது தீங்கு விளைவிப்பதில்லை என தெரிவிக்கப்பட்டது.

    இது தொடர்பாக மத்திய, மாநில அரசுகள் பதில் அளிக்க ஐகோர்ட்டு உத்தரவிட்டது. பிரமாண பத்திரம் தாக்கல் செய்ய 2 வாரம் அவகாசம் கேட்கப்பட்டது. இதையடுத்து மனு மீதான விசாரணை 2 வாரங்களுக்கு ஓத்தி வைக்கப்பட்டது.

    அதே நேரம் தரமற்ற ஏலக்காயில் தயாரிக்கப்பட்ட அரவணை விற்பனையை நிறுத்துமாறு நீதிபதிகள் அனில் கே. நரேந்திரன், பிஜி அஜித்குமார் ஆகியோர் அடங்கிய டிவிஷன் பெஞ்ச் உத்தரவிட்டது.

    இதனைத் தொடர்ந்து சபரிமலையில் நேற்று மாலை அரவணை விற்பனை நிறுத்தப்பட்டது. இதனால் ஏற்கனவே தயாரித்து வைக்கப்பட்டிருந்த 6½ லட்சம் டின் அரவணைகள் வீணானது. இதன் மதிப்பு சுமார் ரூ.6½ கோடியாகும்.

    இதுகுறித்து திருவிதா ங்கூர் தேவசம் போர்டு தலைவர் ஆனந்த கோபன் கூறுகையில், ஐகோர்ட் உத்தரவுப்படி ஏற்க னவே தயாரித்து இருப்பு வைக்கப்ப ட்டிருந்த அரவணை விற்பனை நிறுத்தப்பட்டு உள்ளது. ஏலக்காய் இல்லாத அரவணை தயாரிக்க உத்தரவிடப்பட்டு, தயாரிப்பு பணியும் தொடங்கி விட்டது. 2½ லட்சம் டின்கள் அர வணையை ஓரே நேரத்தில் தயார் செய்யலாம். ஆர்கானிக் ஏலக்காயை கொள்முதல் செய்வதற்கான சாத்தியக்கூறுகளையும் ஆய்வு செய்து வருகிறோம். அப்படி கொள்முதல் செய்யப்பட்டால், அது அரவணை தயாரிக்கப் பயன்படுத்தப்படும். ஆனால் நாம் முதலில் தரத்தை சரி பார்க்க வேண்டும் என்றார்.

    அதன்படி புதிதாக ஏலக்காய் சேர்க்காமல் தயாரிக்கப்பட்ட அரவணை இன்று முதல் பக்தர்களுக்கு விநியோகம் செய்யப்பட்டது.

    • ஐய்யப்பன் கோவிலுக்கு வரும் பக்தர்கள் விலை உயர்ந்த பொருட்களை காணிக்கையாக வழங்குவது வழக்கம்.
    • கோவிலுக்கு வந்த பக்தர் ஒருவர் ரூ.45 லட்சம் மதிப்பிலான 108 பவுன் தங்க சங்கிலியை காணிக்கையாக வழங்கினார்.

    திருவனந்தபுரம்:

    கேரளாவில் உள்ள பிரசித்தி பெற்ற சபரிமலை ஐய்யப்பன் கோவில் நடை கடந்த 16-ந்தேதி திறக்கப்பட்டது.

    ஆவணி மாத பூஜைகளுக்காக திறக்கப்பட்ட கோவில் நடை நாளை வரை திறந்து இருக்கும். இரவு 10 மணிக்கு நடை அடைக்கப்படும்.

    அதன்பின்பு ஓண பண்டிகைக்காக செப்டம்பர் 6-ந்தேதி திறக்கப்படுகிறது. அன்று முதல் 10-ந்தேதி வரை நடை திறந்து இருக்கும். ஓணப்பண்டிகையின் போது சபரிமலை ஐய்யப்பன் கோவிலில் விஷேச பூஜைகள் நடைபெறும்.

    ஐய்யப்பன் கோவிலுக்கு வரும் பக்தர்கள் விலை உயர்ந்த பொருட்களை காணிக்கையாக வழங்குவது வழக்கம்.

    அந்த வகையில் நேற்று கோவிலுக்கு வந்த பக்தர் ஒருவர் ரூ.45 லட்சம் மதிப்பிலான 108 பவுன் தங்க சங்கிலியை காணிக்கையாக வழங்கினார்.

    வெளிநாடு வாழ் இந்தியரான அந்த பக்தர் நேற்று கோவிலுக்கு சென்று சன்னிதானம் முன்பு தங்க சங்கிலியை ஐய்யப்பனுக்கு காணிக்கையாக செலுத்தினார்.

    ×